Friday, April 4, 2025
Homeசெய்திகள்மகா கும்பமேளாவில் காணாமல் போன 13000 பேரை மீட்டு கோயா பாயா பிரிவு சாதனை.

மகா கும்பமேளாவில் காணாமல் போன 13000 பேரை மீட்டு கோயா பாயா பிரிவு சாதனை.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களையும் சேர்த்து உ.பி. அரசின் ‘கோயா பாயா’ (தொலைந்தவர்கள் – கண்டுபிடிக்கப்பட்டவர்கள்) பிரிவினர் சுமார் 13,000 பேரை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.

பிரயாக்ராஜின் முக்கிய ரயில் நிலையம், 3, 4, 5, 8, 9, 21, 23, 24 ஆகிய செக்டார் என 10 இடங்களில் கோயா பாயா பிரிவு செயல்படுகிறது. இவற்றை முதல்வர் ஆதித்யநாத் கடந்த டிசம்பர் 7-ம் தேதிதொடங்கி வைத்தார். காணாமல் போனவர்கள் பற்றி இப்பிரிவில் அளிக்கப்படும் புகார்களுக்கு டிஜிட்டல் முறையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது

கோயா பாயா பிரிவு கிளைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) பயன்படுத்தப்படுகிறது. திரிவேணி சங்கம கரையில் இப்பிரிவினர் 1,800 கேமராக்களை பொருத்தி ஏஐ முறையில் காணாமல் போனவர்களின் முகங்களை அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும் கோயா பாயா கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனைத்து சமூக வலைதளங்களிலும் தகவல்கள், படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. திரிவேணி சங்கமத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.

தவிர உ.பி. காவல் துறை ஒலிப்பெருக்கிகளிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது முதல் இதுவரை சுமார் 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள். மவுனி அமாவாசை நெரிசலில் மட்டும் 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 7,500 பேர் காணாமல் போய் இருந்தனர். நேபாளில் இருந்து வந்த 11 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.

காணாமல் போனவர்கள் மீட்கப்பட்ட பிறகு, அவர்களது குடும்பத்தார் வந்து அழைத்துச் செல்லும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த முகாம்களில் அனைவருக்கும் உணவு, கம்பளி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் உ.பி. அரசு செய்துள்ளது. காணாமல் போனவர்கள் பற்றி தகவல் அளிக்க உ.பி. அரசு 1920 என்ற ஹெல்ப் லைன் எண்ணையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments