
கேரளாவில் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆனநிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தி்ல் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா. இவருக்கும், ஆண் செவிலியரான பிரபின் என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கடந்த 2023 மே மாதம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பிரபின் விஷ்ணுஜாவை திருமணமானதில் இருந்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் துன்பப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணுஜா கடந்த வாரம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது மரணத்துக்கு கணவர் பிரபின்தான் காரணம் என பெண் வீட்டார் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன் கூறியதாவது: அழகும் இல்லை, வேலையும் இல்லை என கூறி எனது மகளை பிரபின் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த உண்மை அவளது மரணத்துக்குப் பிறகு நண்பர்கள் மூலமாகத்தான் தெரியவந்தது. தனது கணவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்துவதை பெற்றோரான எஙகளிடம்கூட அவள் தெரிவிக்கவில்லை. மேலும், பிரபினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. எனது மகளை அவன் தான் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளான். இதுகுறித்து போலீலார் தீவிரமாக விசாரணை நடத்தி உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.