
வயிற்றுப் பிழைப்புக்காக எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தண்டித்து வருகிறது. ஆனால், இந்திய – இலங்கை பாதுகாப்பு வேலிகளை எல்லாம் ‘தந்திரமாக’ தாண்டி இலங்கையிலிருந்து தங்கத்தையும் இங்கிருந்து போதைப் பொருட்களையும் கடத்திக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
இந்திய – இலங்கை கடல் பிராந்தியத்தில் காலம் காலமாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தாலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு கஞ்சா, போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், மஞ்சள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறைவான நாட்டிக்கல் மைல் தூரம் என்பதால் இந்தக் கடத்தலுக்கு கடத்தல் புள்ளிகள் பெரும்பாலும் ராமநாதபுரம் கடல் வழியையே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதைப் புரிந்துகொண்டு கடத்தல் புள்ளிகள் வெளிநாடுகளில் இருந்து ஆகாய மார்க்கமாகவும் பெருமளவு தங்கத்தைக் கடத்தி வருகிறார்கள். ஆனால், அவற்றில் பெரும்பகுதி சுங்கத்துறையினரின் கைகளில் சிக்கிவிடுகின்றன. இதனால், வெளிநாட்டுத் தங்கத்தை இலங்கை வரை இலகுவாகக் கொண்டு வந்து அங்கிருந்து கடல் மார்க்கமாக கள்ளத்தனமாக இந்தியாவுக்குக் கடத்துகிறார்கள். ஆகாய மார்க்கமாக வரும் கடத்தல் தங்கத்தை விட கடல் மார்க்கமாக வந்து குவியும் கள்ளத் தங்கத்தின் அளவு பலமடங்கு அதிகம் என்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டுமே இலங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சுமார் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கமானது கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டிருப்பது பிடிபட்ட கடத்தல் கூலிகள் மூலமாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட ரூ.7.50 கோடி மதிப்புள்ள 11.300 கிலோ தங்கக் கட்டிகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்தனர். அதேபோல் தூத்துக்குடி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான களைக்கொல்லி மருந்தை யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இலங்கை சர்வதேச துறைமுகத்திற்கு பல நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலமாகவும் சர்வதேச விமானங்கள் மூலமாகவும் இலங்கைக்குள் கடத்தல் தங்கம் வந்து குவிவதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தங்கம் தான் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு பெருமளவில் கடத்தப்படுகிறது. கடல் நுணுக்கம் தெரிந்த சிலரை இந்தக் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தும் கடத்தல் புள்ளிகள் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அவர்களை ரிமோட்டில் இயக்குகிறார்கள். அப்படியே கடத்தல் தங்கம் பிடிபட்டாலும் கடத்தல் கூலிகள் தான் சிக்குகிறார்களே தவிர இதுவரைக்கும் கடத்தல் முதலாளிகள் யாரும் சிக்கியதாக சரித்திரம் இல்லை.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கப்பல் போக்குவரத்து சரளமாக இருந்த காலங்களில் தமிழகத்திலிருந்து உணவுப் பண்டங்கள், பீடி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், இலங்கையிலிருந்து லுங்கி, குளியல் சோப்களை வாங்கி வருவார்கள். இப்போது கடத்தல் புள்ளிகள், இலங்கையிலிருந்து தங்கத்தை இங்கு கடத்திவிட்டு இங்கிருந்து, கஞ்சா, போதை மருந்துகள் உள்ளிட்டவற்றையும், மஞ்சள், உரம், பீடி இலைகள் உள்ளிட்டவற்றையும் கடத்துகிறார்கள்.இந்தக் கடத்தல் வியாபாரத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலருக்கும் பங்கிருப்பதாகச் சொல்கிறது போலீஸ். இவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்திய – இலங்கை கடற் பிராந்தியத்தில் கடத்தல் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ராமநாதபுரத்திலிருந்து மட்டுமல்ல இரு நாட்டு பாதுகாப்பு வளையங்களையும் கேள்விக்குள்ளாக்கி தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்தும் கடத்தல் புள்ளிகள் தாங்கள் நினைத்ததை தங்குதடையின்றி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.