
மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது.
வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 30 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (பிப்.,03) வசந்த பஞ்சமி தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நெரிசல், அசம்பாவிதத்தை தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் உ.பி., அரசு செய்துள்ளது.