
மகளிர் டி20 உலகக் கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மெய்கே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் கோங்கடி திரிஷா 3, வைஷ்ணவி சர்மா, ஆயுஷி ஷுக்லா, பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2, ஷப்னம் ஷகீல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.பின்னர் விளையாடிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கமாலினி 8 ரன்களில் வீழ்ந்தார். கோங்கடி திரிஷா 44, சானிகா சால்கே 26 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இதையடுத்து இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. மகளிர் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகி, தொடர்நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.