
அயோத்தியில் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 22 வயது பெண், கொலை தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் அயோத்தி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஜனவரி 30ம் தேதி இரவு பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிய குடும்பத்தினர், போலீசாரிடம் இது குறித்து புகாரளித்தனர்.
அதை தொடர்ந்து காணாமல் போன பெண்ணின் உடல், அப்பகுதியில் உள்ள கால்வாயில் ஆடைகள் ஏதுமின்றி, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பெண்ணைக் கொன்றதாகக் கூறப்படும் மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஹரி ராம் கோரி, விஜய் சாஹு மற்றும் திக்விஜய் சிங் ஆகிய மூவரும் மது போதையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகவும், பெண்ணின் உடலை அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த கால்வாயில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என்று குற்றம் சாட்டி, பெண்ணின் கண்கள் பிடுங்கப்பட்டதாகவும், எலும்புகள் உடைந்ததாகவும், உடலில் ஆழமான காயங்கள் இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.