
‘தி பாரடைஸ்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சைலேஷ் கோலனு இயக்கி வரும் ‘ஹிட் 3’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரித்தும் வருகிறார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
‘தி பாரடைஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தனது உடலமைப்பையும் மாற்றி வருகிறார் நானி. தற்போது இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நானி நடித்த ‘ஜெர்சி’ மற்றும் ‘கேங்க் லீடர்’ படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். அவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக ‘தி பாரடைஸ்’ படத்திலும் நானி – அனிருத் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.