
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,797-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,907-க்கும், மும்பையில் ரூ.1,749-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் ரூ.6.50 குறைந்து ரூ.1959.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் ரூ.803, சென்னையில் ரூ.818.50 ஆக உள்ளது. மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829 என்றளவில் விற்பனையாகிறது.