
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
’ராம்’ இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ‘பறந்து போ’ என தலைப்பிட்டுள்ளனர். முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார் ராம். செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தினை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழுவினர் விண்ணப்பித்து வந்தனர். இந்த சூழலில் இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குநர் ராம் கூறியுள்ளதாவது: ‘பேரன்பு’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழாவின் லைம்லைட் பிரிவில் ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) ப்ரீமியர் செய்யப்படுகிறது. இதில் நானும் சிவாவும் வரும் பிப்ரவரி 4, அன்று கலந்து கொள்கிறோம்” இவ்வாறு ராம் தெரிவித்தார்.