நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 30-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேடை அமைக்கும் பணிகள் கூட இரண்டு நாட்கள் முன்பு தொடங்கியது. இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.
இந்நிலையில், திடீரென இந்த விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நடிகர் விஜய் படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஆளும்கட்சி தரப்பு நடிகர் விஜய் மிரட்டி வருவதாக பதிவு வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அப்படி எதுவும் அரசியல் அழுத்தங்கள் வரவில்லை என படக்குழு தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனம் முன் வந்து பதில் கொடுத்து இருந்தது.
இந்நிலையில் படக்குழு சொன்னதற்கு எதிராகவும்.. சவுக்கு சங்கர் சொன்னதற்கு வழு சேர்க்கும் விதமாகவும் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இசை வெளியீட்டு விழாவையே ரத்து செய்து இருக்கிறது படக்குழு.
இதனை அறிந்த ரசிகர்கள், என்ன கூத்து இது..? தமிழ்நாட்டுக்கு ஏதேனும் தீவிரவாத மிரட்டல் இருக்கிறதா..? அல்லது நாடு ஏதேனும் அசாதாரணமான நிலையில் இருக்கிறதா..? ஒரு இசை வெளியீட்டு விழாவை.. வெறும் பத்தாயிரம் பேர் பங்கு பெறக்கூடிய ஒரு இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாத அளவுக்கா இங்கே சட்டம் ஒழுங்கு இருக்கிறது..? இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வசதிகள் கொடுக்க முடியாத அளவுக்கா தமிழக காவல்துறை இருக்கிறது..? என்று விஜய் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடுகள் காரணத்திற்காக இந்த இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக படக்குழு அறிவித்திருக்கிறது என்றால் இது சட்டம் ஒழுங்கின் மீதும், காவல் துரையின் மீதும் படக்குழு எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது என்பதை காட்டுகிறது என விஜய் ரசிகர்கள் தங்கள் வேதனையை பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய கலவரங்கள், போக்கு வரத்து நெரிசல், பாலியல் அத்து மீறல்கள் நடந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கிட்டத்தட்ட அந்த இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், இதே தமிழ்நாட்டில் இதே நேரு உள்விளையாட்டரங்கில் பலமுறை இசையில் நடந்திருக்கின்றன.
அப்போதெல்லாம் ஏற்படாத பாதுகாப்பு குறைபாடு இப்போது என்ன ஏற்பட்டு விட்டது என படக்குழுவை நோக்கி ரசிகர்கள் கேள்வியை வீசி வருகின்றனர்.
ஆனால், படக்குழுவோ இதற்கு பின்னால் அரசியல் அழுத்தங்கள் எதுவும் கிடையாது நாங்களாகவே தான் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்து விட்டோம் என்று கூறுகிறார்கள்.
மறுபக்கம் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திமுகவின் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று கூறி வருகிறார். உண்மை என்ன..? என்று பல்வேறு விவாதங்கள் இணைய பக்கங்களில் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.