Reginna Movie Story Review: மலையாள இயக்குனரான டோமின் டிசில்வா முதல் முதலாக தமிழில் இயக்கிய ரெஜினா திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதில் சுனைனா, ரித்து மந்திரா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சதீஷ் நாயர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மொத்த திரை விமர்சனத்தையும் இங்கு விரிவாக பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பழிவாங்கும் கதைகளை பார்த்திருப்போம். அந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம் தான் ரெஜினா. தன்னுடைய காதலனை வங்கிக் கொள்ளையின்போது கொன்றவர்களை தேடி பிடித்து காதலி பழிக்குப் பழி வாங்குவது தான் ரெஜினா படத்தின் ஒன்லைன் ஸ்டோரி .
சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கண் முன் கொலை செய்ததை பார்த்து சுனைனா, பல கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்து கடைசியில் காதலன் மூலம் ஒரு நிம்மதியான இடத்திற்கு வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட காதலனை வங்கியில் நடக்கும் மோசமான கொள்ளை சம்பவத்தின் போது கொன்று விடுகின்றனர். அந்தக் கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீஸிடம் சுனைனா தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்.
ஆனால் போலீஸ் சுனைனாவை அலைகழிக்கின்றனர். கடைசியில் அவரே களத்தில் இறங்கி காதலனை கொன்ற அந்த கொள்ளையர்களை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்வது தான் இந்த படத்தின் கதை. இதற்கு முன்பு சுனைனா நடித்த படங்களில் அவரை சாந்தமாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஆக்ரோசமாக பார்க்கவே முடியலை. அப்பாவியாக காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கும் சுனைனா, எந்த நீதியும் கிடைக்காததால் தனக்கான நீதியை தானே தேடிக் கொள்ள வேண்டும் என புறப்படுகிறார்.
அதுவரையில் அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஏதோ ஒரு மாறுபட்ட பழிவாங்கும் கதையை பார்க்கப் போகிறோம் என ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் படத்தின் திரைக்கதை தடம் மாறி எங்கெங்கயோ பயணித்து ஒரு வழியாய் கிளைமாக்ஸ்க்கு வந்து முடிந்தது. இதில் திடீரென சுனைனா கடற்கரை அருகே ஒரு பார் நடத்தி, ரித்து மந்திராவுடன் நெருங்கி பழகுவது போல காண்பித்ததால், இந்தப் படம் வேறு மாதிரியான படமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அதன்பின் இது ஒரு பழிவாங்கும் யுக்தி என தெரிந்ததும் தான் நிம்மதியே வந்தது.
இந்தப் படத்தில் ரித்து மந்திராவை கவர்ச்சிக்காகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த படத்தில் ரித்து மந்திராவின் கணவராக நடித்திருப்பவர் நிவாஸ் ஆதித்தன். இவரை பிளாக்மெயில் செய்துதான் சுனைனா அவரது பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறார். இதில் இவருடைய நிலைமை சந்தில் மாட்டிக்கொண்ட எலி போல் சுனைனாவிடம் அல்லோலப்படுகிறார். இவரை தவிர வேறு சில கதாபாத்திரங்களும் வருகிறது.
ஆனால் கதைக்கும் அவர்களுக்கும் என்ன முக்கியத்துவம் என்றெல்லாம் கேள்வி வருகிறது. ஆனால் பாவம் இயக்குனர் மாறுபட்ட திரில்லர் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஒட்டு மொத்த ட்விஸ்ட்டையும் கிளைமாக்ஸ்க்கு முன்பாக அவிழ்த்து விட்டிருக்கிறார். கொஞ்சம் திரைக்கதையை மட்டும் சரி செய்திருந்தால் அந்த ட்விஸ்ட்டுக்கான அழுத்தம் நன்றாய் பதிவாயிருக்கும். ஏதோ புது மாதிரியாக கதை சொல்கிறோம் என்ற பெயரில் பார்ப்பவர்களை குழப்பி விட்டதுதான் மிச்சம்.
இந்த படத்தில் சுனைனா வில்லன்களை தேடி போவதை சிரமப்பட்டு காட்டிவிட்டு, அவர்களைப் பார்த்த பின் எளிதில் ரெஜினா தீர்த்து கட்டுவது எப்படி என்று தான் தெரியவில்லை. படத்தின் இயக்குனர் தொடக்கத்தில் சுனைனாவை ஏஞ்சலாக காட்டிவிட்டு கடைசியில் பேயாக மாற்றிவிட்டார். மொத்தத்தில் டிரைலரில் புலி, சிங்கம் என பயம் காட்டிய ரெஜினா சரவெடியாக இருக்கும் என நினைத்தால், படம் சீக்கிரமே சலிப்பு தட்டியது. இருந்தாலும் ஒரு தடவை பார்க்கக்கூடிய சுமாரான படம் தான் ரெஜினா.
ரெஜினா படத்தின் சினிமா பேட்டை ரேட்டிங் -2.25/5