தமிழ் சினிமாவில் சைக்கோத்தனமான காதலை சொன்ன 5 படங்கள்.. பொம்மைக்காகவே உயிரை விட்ட எஸ்.ஜே.சூர்யா

0
307

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே காதல் கதைகளை கொண்டாட தவறியதே இல்லை. ஒரே மாதிரியான காதல் கதைகளை சொன்னால் சலித்து போய்விடும் என்பதற்காகவே இயக்குனர்கள் காதல் கதைகளிலேயே நிறைய வித்தியாசம் காட்டுவார்கள். பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என நிறைய பார்த்திருக்கிறோம். அதில் ஒரு ரகம் தான் சைக்கோ காதல். தீராத காதலால் மனநோயாளியாக மாறும் ஹீரோக்களை மையமாகக் கொண்டு 5 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கின்றன.

பொம்மை: நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியான சைக்கோ காதல் திரைப்படம் தான் பொம்மை. தனக்கு பிடித்த பெண் சிறு வயதிலேயே தன்னை விட்டு பிரிந்து போய் இருந்தாலும், அவளையே நினைத்து வாழும் ஹீரோ தான் செய்யும் பொம்மையை அந்த பெண்ணாக பாவித்து கொண்டு அவளை உயிருக்கு உயிராக காதலித்து, அதற்காகவே உயிரை விடுவதைப் போல் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் நாயகன் எஸ் ஜே சூர்யா வழக்கம் போல தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.

காதலில் விழுந்தேன்: யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் ஹீரோ நகுல் தன்னை காதலிக்கும் காதலியை மொத்த உலகமாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, சில சூழ்ச்சிகளால் அவள் இறந்து விடுகிறாள், அவள் இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த ஹீரோ அவளுடைய பிணத்தை கடத்திக் கொண்டு போய் அதன் கூடவே வாழ ஆரம்பித்து விடுவான். மன நோயாளியாக மாறும் அந்த ஹீரோ இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுவான்.

கண்களால் கைது செய்: மிகப்பெரிய பணக்காரனாக இருக்கும் ஹீரோ, தன்னிடம் வேறொரு காரணத்திற்காக வேலைக்கு சேரும் பெண்ணான ப்ரியாமணியை தீவிரமாக காதல் செய்வான். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் ஹீரோ அவளுடன் ஊர் சுற்றுவது போல், அவளை திருமணம் செய்வது போல் படம் முழுக்க காட்டப்பட்டிருக்கும். ஆனால் படத்தின் கிளைமாக்சின் போதுதான் தெரிய வரும் அவன் வெளிநாடு சென்றபோதே அந்த பெண் இறந்து இருப்பாள், அவளை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, அவள் தன்னுடனே இருப்பது போல் இவன் வாழ ஆரம்பித்து இருப்பான்.

காதல் கொண்டேன்: பிறந்ததிலிருந்து அனாதை ஆசிரமத்தில் வளரும் ஹீரோ தனுஷுக்கு கல்லூரியில் கிடைக்கும் திடீர் நட்பாக ஹீரோயின் சோனியா அகர்வால் அறிமுகம் கிடைக்கும். அவளுக்கு தன் மீது காதல் இல்லை என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஹீரோ, அவளை கடத்திச் சென்று காட்டில் வைத்திருப்பதோடு, அவளிடம் தன் காதலையும் வெளிப்படுத்துவான். இறுதியில் தன் நிலையை புரிந்து கொண்ட ஹீரோ மலையில் இருந்து விழுந்து இறப்பது போல் காட்டப்பட்டு இருக்கும்.

குடைக்குள் மழை: டிவி நிகழ்ச்சி ஒன்றிற்காக படத்தின் ஹீரோ பார்த்திபனை காதலிப்பது போல் நடித்து இருப்பார் அந்த ஹீரோயின். அது பொய் என தெரிந்தும் தன் கற்பனையிலேயே ஹீரோயினை கடத்திக் கொண்டு வந்து தனியாக அவளை வீட்டில் அடைத்து வைத்திருப்பது போலவும், அவனைப் போலவே அவனுடன் ஒரு தம்பி இருப்பது போலவும் கற்பனை செய்து படம் முழுக்க வாழ்ந்திருப்பார்.