160 கோடி வசூல் சாதனை கேரளாவை உலுக்கிய 2018 உண்மை சம்பவம் எப்படி இருக்கு முழு விமர்சனம்

0
301

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் 2018. மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட இப்படம் தற்போது தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

கேரளாவையே உலுக்கிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 160 கோடி வரை வசூல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அளவுக்கு நிஜ கதைக்கு உயிரோட்டமான உணர்வை கொடுத்திருக்கும் இப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்து விட்டது. அந்த வகையில் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

ராணுவத்திலிருந்து வரும் டோவினோ தாமஸ், டிவி ரிப்போர்ட்டர் அபர்ணா பாலமுரளி, மீன் பிடிப்பவர்கள் ஆக இருக்கும் லால், நரேன், லாரி டிரைவர் கலையரசன் இப்படி வேறு வேறு சூழ்நிலையில் இருக்கும் முரண்பட்ட மனிதர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். அதாவது கேரளா மாநிலத்தையே நிலைகுலைய செய்த பேய் மழை இவர்களை ஒன்று கூட வைக்கிறது.

அந்த சம்பவத்தினால் நடக்கும் பாதிப்பு என்ன, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடன் வெளிப்படுத்தி இருக்கிறது இந்த 2018. படத்தில் காட்சிகளாக பார்க்கும் போதே நமக்கு பதறுகிறது. அப்படி இருக்கும்போது அந்த அனுபவத்தை கடந்து வந்த மக்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை இப்படம் முழுமையாக உணர வைக்கிறது.

அதிலும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டு மக்கள் வெளிவர முடியாமல் கஷ்டப்படும் போது மனித நேயத்துடன் உதவ வரும் ஒவ்வொருவரும் ஹீரோக்கள் தான் என்பதையும் இப்படம் ஆணித்தரமாக உணர்த்தி விடுகிறது. அந்த வகையில் படத்தின் விஷுவல் காட்சிகளும், பின்னணி இசையும் கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். மேலும் ஆவணப்படம் போன்று இல்லாமல் கதையோடு ரசிகர்களை ஒன்ற வைக்கும் திரை கதையும், காட்சிகளும் மனதை வருடி செல்கிறது. இதுவே இப்பட வசூல் சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த 2018 மதங்களைக் கடந்த மனிதநேயத்துடன் கொண்டாட வைத்துள்ளது.