2016 ஆம் ஆண்டு ரிலீசான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி தானே இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் நேற்று ரிலீசானது. இந்த படம் முதல் பாகத்தைப் போல முழுக்க முழுக்க பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. முதல் பாகத்தோடு இந்த படத்தை விட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் நொந்து போகும் அளவிற்கு கதைக்களம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிறது.
படத்தின் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று காலை முதல் ட்ரெண்டாகிக் கொண்டிருந்த நேரத்தில், மாலையில் இருந்து மற்றொரு விஷயம் பிச்சைக்காரன் 2 படத்தை பயங்கர ட்ரெண்டாக்கி விட்டது. இதனாலேயே இந்த படத்தை திரும்ப பார்ப்பதற்கு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் தான் நேற்று மாலை இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இணைந்து புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் செல்லாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற விஷயம் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதை மறுத்தது. ஆனால் திடீரென்று தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்த பண மதிப்பிழப்பு அறிவிப்பிற்கும், பிச்சைக்காரன் படத்திற்குமான சம்மந்தம் தான் தற்போது சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது பிச்சைக்காரன் முதல் பாகத்தில் சாதாரணமாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. அதில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்போது ஒழிக்கிறார்களோ அப்போதுதான் நாட்டில் வறுமை ஒழியும் என்று பிச்சை எடுப்பவர் ஒருவர் பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது அந்த காட்சி.
பிச்சைக்காரன் முதல் பாகம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என இரவோடு இரவாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பயங்கர கஷ்டத்தை அனுபவித்தனர். அந்த பண மதிப்பிழப்பு நேரத்தில் நடந்த விஷயங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. பிச்சைக்காரன் படத்தில் சொன்னது போலவே நடந்து விட்டது என்று அப்போதும் இந்த படம் டிரெண்டானது.
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் டீசரிலேயே விஜய் ஆண்டனி 2000 ரூபாய் நோட்டை உபயோகப்படுத்துவது போல் காட்டப்பட்டு இருக்கும். இதே போல் படம் முழுக்க அடிக்கடி 2000 ரூபாய் நோட்டுகள் காட்டப்படும். நேற்று படம் ரிலீஸ் ஆகி 24 மணி நேரமாவதற்குள் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருப்பது, இந்த படத்திற்கும் பணம் மதிப்பிழப்பிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் தெரிகிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.