
கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் அணி. மிகவும் வலிமையான அணியாக ஆப்கானிஸ்தான் உருவெடுத்து வருகிறது. அந்த அணியின் முக்கியமான வீரர் ஹஸ்ரத்துல்லா ஜசாய். தனது திறமை காரணமாக உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ள ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஜசாய், கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த யுவராஜ் சிங் மற்றும் கேரி சோபர்ஸ் வரிசையில் 6வது வீரராக உள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில், அதிவேக அரைசதம் அடித்த 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்லின் வேகமான அரைசத சாதனையையும் ஹஸ்ரத்துல்லா ஜசாய் 12 பந்துகளில் சமன் செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் ஹஸ்ரத்துல்லா ஜசாய் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 16 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 361 மற்றும் 1160 ரன்கள் எடுத்துள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார், இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்கள் அடங்கும்.
இந்நிலையில், ஹஸ்ரத்துல்லா ஜசாய்க்கு எதிர்பாராத சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹஸ்ரத்துல்லா ஜசாயின் இரண்டு வயது மகள் இறந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் அணியின் சக வீரர் கரீம் ஜனத், சோகமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள கரீம் ஜனத், “எனது நெருங்கிய நண்பர் மட்டுமல்ல சகோதரர் போன்றவர் ஹஸ்ரத்துல்லா ஜசாய். அவர் தனது மகளை இழந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் துணை நிற்போம். இந்த துயரமான இழப்பை அவர்கள் கடந்து செல்ல அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். ஹஸ்ரத்துல்லா ஜசாய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கரீம் ஜனத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.